சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு


சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 3:45 AM IST (Updated: 15 Aug 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இருமாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தேனி,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று அணைகள், கோவில்கள், பஸ் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்பநாய்கள் உதவியுடனும் வெடிகுண்டுகள் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இந்த விளையாட்டு அரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

தமிழக–கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்து உள்ளதால் இருமாநில எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி மலைச்சாலை ஆகிய சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், தங்கும் விடுதிகளிலும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளார்களா? என்று விசாரணை நடத்தி வருவதோடு, சந்தேகப்படும்படியான நபர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் அணைப்பகுதியில் சுற்றித்திரிகிறார்களா? என கண்டறிய ரோந்து பணியையும் போலீசார் மேற்கொண்டனர். இது தவிர அணையின் முக்கிய இடங்கள் மற்றும் பூங்கா பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளிடமும் உடைமைகள் சோதனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 1,200–க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story