காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இளையான்குடி வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்


காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இளையான்குடி வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்
x
தினத்தந்தி 15 Aug 2017 7:00 AM IST (Updated: 15 Aug 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த இளையான்குடிராணுவ வீரரின் உடல் நேற்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் இளையராஜா(வயது24). இவர் கடந்த 2012–ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் அமைந்துள்ள ஆவ்னீரா கிராமத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர தாக்குதல் நடைபெற்றது.

இதில் தீவிரவாதிகளை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளும் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்ப்பட்டனர். இதேபோல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா மற்றும் மற்றொரு ராணுவ வீரர் சுமேத்வாமன் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

இளையராஜாவின் உடல் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து ராணுவ வாகனத்தில் மானாமதுரை, சிவகங்கை வழியாக மாலை 3.15மணிக்கு கண்டனி கிராமத்திற்கு வந்தடைந்தது. இதைத்தொடந்து அவரது வீட்டின்முன்பு உடலை வைத்து ராணுவ மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் இளையராஜா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கோவையைச் சேர்ந்த 44–வது படைப்பிரிவு மேஜர் ராகேஷ்குமார் மற்றும் அவரது தலைமயில் 28 ராணுவ படை வீரர்கள் மற்றும் மதுரை என்.சி.சி. பிரிவு தலைமை அதிகாரி ராமசாமி தலைமையில் என்.சி.சி படைவீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, செந்தில்நாதன் எம்.பி. மாவட்ட வருவாய் அலுவலர் பிச்சப்பா, கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, இளையான்குடி தாசில்தார் செந்தில்வேல், தி.மு.க மாவட்ட செயலாளர் பெரியகருப்பன்எம்.எல்.ஏ, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ சுப.மதியரசன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கண்டனி கிராமத்திற்கு சுடுகாட்டு மையத்திற்கு ராணுவ வாகனத்தில் இளையராஜா உடல் எடுத்து செல்லப்பட்டு அங்கு 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

இளையராஜாவிற்கு 11 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவரின் உடலை பார்த்து செல்வி கதறி அழுதது அனைவரையும் உருகச்செய்தது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது இளையராஜா அவரது சொந்த கிராமத்திற்கு வந்து கிராமத்தினருடன் விழாவை கொண்டாடி வந்துள்ளார். தற்போது கிருஷ்ணஜெயந்தி விழாவின் போது அவர் மரணமடைந்ததால் அந்த கிராமத்தினர் விழாவை புறக்கணித்து துக்கம் அனுசரித்தனர்.


Next Story