தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான சென்டாக் கலந்தாய்வு ஒத்திவைப்பு மாணவர்கள், பெற்றோர் எதிர்ப்பால் பரபரப்பு


தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான சென்டாக் கலந்தாய்வு ஒத்திவைப்பு மாணவர்கள், பெற்றோர் எதிர்ப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 4:30 AM IST (Updated: 15 Aug 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கிய போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி தொடங்கி 2 நாட்கள் கலந்தாய்வு நடந்தது. இந்தநிலையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று காலை புதுவை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் தொடங்கியது.

மொத்தம் உள்ள 285 இடங்களுக்கு 1,400க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் நேற்று காலை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் கூடினர். சென்டாக் கலந்தாய்வு தொடங்கியதும் புதுவையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மதிப்பெண்கள் அடிப்படையில் புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு வழங்க உள்ள நிலையில், புதுவையில் விலக்கு அளிக்கும் வரை நிர்வாக ஒதுக்கீட்டிற்கான சென்டாக் கலந்தாய்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து சென்டாக் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புதுவை வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே சென்டாக் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான சென்டாக் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story