சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
சென்னை நகரின் பல இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக நடத்தப்பட்டது.
சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதி சிறுவர்கள் கிருஷ்ணர் வேடத்திலும், சிறுமிகள் ராதை வேடத்திலும் கோவில் வளாகத்தில் கூடினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.
சென்னை அயனாவரத்தில் ராமலிங்கபுரம் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் உறியடி விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதி சிறுவர்-சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெண்களுக்கான கோலப்போட்டியும் நடத்தப்பட்டது.
இதுபோல நகரின் பல இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக நடத்தப்பட்டது. பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வீடுகளிலும் வெண்ணெய், சீடை, முறுக்கு, அவல் உள்ளிட்ட உணவு வகைகளை படையலிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story