காந்தியின் புகழ் பரப்பும் மண்டபம்


காந்தியின் புகழ் பரப்பும் மண்டபம்
x
தினத்தந்தி 15 Aug 2017 12:15 PM IST (Updated: 15 Aug 2017 12:07 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காந்தி நினைவு மண்டபம். தேசப்பிதா மகாத்மா காந்தியையும், தேச சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிர்களை தந்த தியாகிகளையும் போற்ற வேண்டிய நாள் இந்நாள்.

ஆங்கிலேயர் பிடியில் கட்டுண்டு கிடந்த தாய் நாட்டை மீட்க நாடு முழுவதும் நடைபெற்ற சுதந்திர போராட்டங்களை மகாத்மா காந்தியடிகள் ஒருங்கிணைத்தார். வெள்ளையரை அகிம்சை வழியில் எதிர்த்தார்.
1947 ஆகஸ்டு 15-ல் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால், மறு ஆண்டே (1948) கோட்சே என்பவரால் சுடப்பட்டு, தன் ரத்தத்தை தாய்மண்ணில் சிந்தி உயிர்த்துறந்தார்.

காந்தியடிகளின் அஸ்தியை பல கலசங்களில் சேகரித்தனர். அதில் ஒரு கலசத்தை நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரிக்கு கொண்டு வந்தனர். எண்ணில் அடங்காத மக்கள் குமரிக்கு வந்து தேசப்பிதா அஸ்திக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முக்கடல் சங்கமம் பகுதியில் அஸ்தியானது கடலில் கரைக்கப்பட்டது.

காந்தியடிகளின் தியாக வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் எடுத்துக்கூறும் வகையில் காட்சி தருகிறது குமரியில் அமைந்திருக்கும் காந்தி மண்டபம்.
அந்த மண்டபம் குறித்த சில தகவல்களை இனி காண்போம்.

காந்தியடிகள் மறைவை தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் அவரைப் போற்றி நினைவிடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. நாட்டின் தென்கோடியான குமரி கடற்கரையிலும் ஒரு நினைவிடம், அதுவும் அவரது அஸ்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திலேயே மண்டபம் கட்டப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்பினர். அதற்கு ஏற்றாற்போல் 1954-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி காந்தி நினைவு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆச்சார்ய கிருபளானி அடிக்கல் நாட்டினார்.

2 ஆண்டுகளுக்கும் அதிகமாக கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று, 1956-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போதைய கேரள கவர்னர் பி.எஸ்.ராவ் மண்டபத்தை திறந்து வைத்தார்.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் காந்தியடிகள் மரணம் அடையும் போது அவருக்கு வயது 79. எனவேதான் 79 அடி உயரத்தில் நினைவு மண்டபத்தையும் உருவாக்கி உள்ளார்கள்.

காந்தி மண்டபத்தை கட்டிடக் கலைக்கு ஒரு உதாரணம் என்று கூறலாம். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதியன்று சரியாக பகல் 12 மணிக்கு சூரிய ஒளியானது, காந்தி மண்டபத்தின் உள்ளே விழுகிறது. அதாவது காந்தி அஸ்தியானது வைக்கப்பட்டு இருந்த இடத்தின் மீது அந்த சூரிய ஒளி அக்டோபர் 2-ந் தேதியன்று விழும் வகையில் நுட்பமாக வல்லுனர்கள் அந்த மண்டபத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது சிறப்புக்குரியது. இந்த அரிய காட்சியை காண அக்டோபர் 2-ந் தேதியன்று ஏராளமானவர்கள் காந்தி மண்டபத்துக்கு வருகை தருவது வழக்கம்.

இப்படி காந்தியின் புகழை முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் இருந்து காந்தி மண்டபம் பரப்பிக் கொண்டிருக்கிறது. எழில் தோற்றத்துடன் காட்சி தரும் காந்தி மண்டபத்தை குமரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நிச்சயம் காண வேண்டும்.
1 More update

Next Story