சிறை கொடுமைகளை விவரிக்கும் சுப்பிரமணிய சிவாவின் கடிதம்


சிறை கொடுமைகளை விவரிக்கும் சுப்பிரமணிய சிவாவின் கடிதம்
x
தினத்தந்தி 15 Aug 2017 8:45 AM GMT (Updated: 15 Aug 2017 8:33 AM GMT)

சுப்பிரமணிய சிவாவின் சிலை- நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட பெரும் தலைவர்களுள் சுப்பிரமணிய சிவாவும் ஒருவர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பிறந்த இவரது இளமை பருவம், திண்டுக்கல், மதுரை, கேரள மாநிலம் என்று நகர்ந்தது.

 ஒரு காலகட்டத்தில் சுதந்திர போராட்டத்தில், எவரும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேட்கையுடன் களம் இறங்கினார். அதனால் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாகி அடுத்தடுத்து சிறை சென்றார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னாளில் நன்னடத்தை காரணமாக ஒன்றிரண்டு ஆண்டுகள் தண்டனை குறைக்கப்பட்டது.

சிறை வாழ்க்கை பற்றியும், அங்கு கடைப்பிடிக்கப்படும் அடக்கு முறைகள் குறித்தும் சுப்பிரமணிய சிவா, தன்னுடன் நெருங்கிப் பழகிய தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து முதலியாருக்கு 14.11.1922-ம் ஆண்டு, கடிதமாகவே எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தை படிப்போம்.

“சத்தியாகிரக போராட்டத்தில் சிறை தண்டனை பெற்று சிறைக்குள்ளே கைதியாக சென்றவுடன், சொந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி வைத்துக்கொண்டு கைதி உடை கொடுத்தார்கள். அதில் ஒரு சிறிய மேலங்கி, காலங்கி, ஒரு குல்லா, ஒரு போர்வை இருந்தது. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடி இருக்கும். அதில் ஒன்று புதியது. மற்றொன்று பழையது. கழுத்தில் கைதி எண், தண்டனை மற்றும் விடுதலையாகும் தேதி பொறிக்கப்பட்ட கழுத்து கட்டை அல்லது தகரவில்லைகளை மாட்டி விடுவார்கள். ஒவ்வொரு கைதிக்கும் வலது காலில் இரும்பு வளையம் போடுவார்கள். மேலும் கைதியின் சிறைவாச சரித்திரத்தை குறித்து வைக்க ஒரு அட்டையும், 2 கம்பளிகள், கயிற்றினால் நெய்த ஒரு பாயும் கொடுப்பார்கள்.

தண்டனையை பொறுத்து ஒரு கைதி எட்டு கஜம் துணி நெய்ய வேண்டும். இதைப்போல கேழ்வரகும் அரைத்து கொடுக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டதில் குறைவாக வேலை செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு. ஒவ்வொரு கைதிக்கும் சிறைக்கு சென்றவுடன் மொட்டை அடித்து விடுவார்கள். உடலில் எந்த பாகத்திலும் அரை அங்குலத்திற்கு மேல் முடி வளர்க்க கூடாது. சவரம் செய்வதற்கு உபயோகப்படுத்தப்படும் கத்தி, சாணை கல்லில் தீட்டப்பட்டவையாக இருக்கும். அதனால் வாரந்தோறும் அதனை பயன்படுத்துவதற்கு பெரும் சித்ரவதையாக இருக்கும்.

காலை 7 மணிக்குள் கேழ்வரகு கஞ்சி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணிக்குள் கேழ்வரகு களி கொடுப்பார்கள். காலை கஞ்சிக்கு ஒரு சட்டினியும், மற்ற 2 வேளைகளுக்கு உப்பும், காரமும் இல்லாத ஒரு குழம்பும் கொடுப்பார்கள். ஞாயிறு, புதன்கிழமைகளில் சோறு போடுவார்கள். அதுவும் வயிறு நிறைய கிடைக்காது. அளவு சாப்பாடுதான். புதன்கிழமை மட்டும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மாமிச உணவு கிடைக்கும். குழம்பு, கூட்டுக்கு பெரும்பாலும் முள்ளங்கிதான்.

சிறைச்சாலையை பொறுத்தவரை, எது செய்தாலும் குற்றம் தான். தப்பித் தவறி எச்சில் துப்பி விட்டால் அது கடுமையான குற்றமாக கருதப்பட்டு, கால்களில் விலங்கு போடுதல், இருட்டு கொட்டடிக்குள் பூட்டி வைத்தல், நிற்க வைத்து ஒரு கம்பியுடன் சேர்த்து விலங்கு போடுதல், முப்பது கசையடிக்கும் குறைவில்லாமல் அடித்தல் போன்ற கடுமையான தண்டனைகளை வழங்குவார்கள். என்ன தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம் ஜெயில் சூப்பிரண்டின் மனநிலையை பொறுத்து அமையும். சிறைக்கு டாக்டர் வந்து செல்வார். உடல் நலமில்லாதவர்கள் அவரிடம் மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொள்ளலாம்.

காலை 5 மணிக்கு ஒரு மணியடிப்பார்கள். அதன்பின் 15 நிமிடம் கழித்து மீண்டும் மணியடிப்பார்கள். எல்லோரும் விழித்தெழுந்து தயாராகி விட வேண்டும். 5.30 மணிக்கு 3-வது மணி அடிக்கும் போது கொட்டடியை திறந்து விடுவார்கள். அப்போது அனைத்து கைதிகளும் வெளியே வந்து விட வேண்டும். அவர்களை சிறை அதிகாரி கள் பார்வையிடுவார்கள். அதன்பின் தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் மலம், ஜலத்தை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தண்டனை அதிகமாகும். அதன்பின்னர் மண்ணையோ, மணலையோ கொண்டு பல் துலக்க வேண்டும். மாலை 5 மணிக்குதான் குளிக்க விடுவார்கள். அதன்பிறகு கொட்டடியில் அடைத்து விடுவார்கள்”.
இவ்வாறு சுப்பிரமணிய சிவா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சிறை வாசத்தில் செக்கிழுத்தல், கல் உடைத்தல், கிணற்றில் நீர் இறைத்தல், தோட்ட வேலை, கம்பளி, ஆடை நெய்தல் உள்பட பல்வேறு வேலைகளை செய்ய வேண்டும். கம்பளி தயாரிக்கும் வேலையை தான் தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு முதலில் கொடுத்தார்கள். ஆட்டு தோலின் கழிவுகளை அகற்றி அதை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்ததினால் அவருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாகும் வரை நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்.

அவரைப் போல் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நிலைமை எவ்வளவு பரிதாபமானது என்பதற்கு சுப்பிரமணிய சிவாவின் கடிதமே சிறந்த உதாரணம்.

Next Story