சுதந்திரதினத்தையொட்டி பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி 31 பேர் கைது
குமரி மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் சுதந்திரதினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் மூவர்ண கொடியை ஏந்தி பேரணி ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் இருந்து தொடங்குவதாக இருந்தது.
ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் சுதந்திரதினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் மூவர்ண கொடியை ஏந்தி பேரணி ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் இருந்து தொடங்குவதாக இருந்தது. சுதந்திரதினத்தையொட்டி நடைபெறுவதால் பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் ஆரல்வாய்மொழி குமாரபுரம் சந்திப்பு பகுதியில் நேற்று பா.ஜ.க. இளைஞர் அணியினர் குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெண்சாம் தலைமையில் போலீசார் மற்றும் மாவட்ட அதிரடிப்படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் காலை 11 மணியளவில் குமாரபுரம் சந்திப்பில் உள்ள கொடிகம்பத்தில் தேசிய கொடி ஏற்றபட்டது. பின்னர் மூவர்ணக்கொடியை ஏந்திய இருசக்கர வாகன பேரணியை தொடங்கிய வைப்பதற்காக பா.ஜ.க. கோட்ட இணை செயலாளர் தருமபுரம் கணேசன் ஒலிபெருக்கியில் பேரணியை தொடங்கி வைப்பதாக அறிவித்தார். அங்கு கூடியிருந்த பா.ஜ.க. இளைஞர்கள் பேரணிக்கு இருசக்கர வாகனத்தை எடுப்பதற்கு தயாரானார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் பெண்சாம் அனுமதியில்லாமல் பேரணியை தொடங்கியதால் தருமபுரம் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞர் அணி பார்வையாளர் பத்மநாபன், ஆரல்வாய்மொழி கேந்திர தலைவர் மாதேவன் பிள்ளை உள்பட 31 பேரை கைது செய்தனர். அவர்கள் வேனில் ஏற்றபட்டு ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு மண்பத்தில் தங்க வைக்கப்பட்டனர்.