நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் வைகோ கோரிக்கை


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் வைகோ கோரிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 16 Aug 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுகிறார். என்னையும் மனநிலை சரியில்லாதவன் என்று கூறுகிறார். கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை 22 ஆண்டுகளுக்கு முன்பே நானும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரும் எதிர்த்தோம். இந்த திட்டத்தால் அதனை சுற்றியுள்ள 6 மாவட்டங்கள் அழிந்து விடும். இந்த திட்டத்தை எதிர்த்து போராடிய திருமுருகன் காந்தி, பேராசிரியர் ஜெயராமன், மாணவி வளர்மதி உள்ளிட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இது ஜனநாயக ஆட்சியா? குண்டர் ஆட்சியா?. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடைசி வரையிலும் போராடுவேன். இதற்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதாடுவேன்.

நீட் தேர்வில் முழுமையான விலக்கு

கிராமப்புற, நடுத்தர மாணவர்கள் நீட் தேர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு பெற முயற்சி எடுத்து வரும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் நீட் தேர்வில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்காமல், முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.

முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தி சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடுகிறார். ஆனால் அவருடைய கணவர் சிதம்பரம் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளார். இது என்ன நியாயம் என்று புரியவில்லை.

குடுமிப்பிடி சண்டை

ஒரே இந்தியா, ஒரே மொழி என்று மத்திய பா.ஜ.க. அரசு பிரசாரம் செய்கிறது. இது தொடர்ந்தால் 100-வது சுதந்திர தின விழா கொண்டாடுவதற்குள் இந்தியா பிளவுபட்டு விடும். தஞ்சாவூரில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளில் ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதனால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். இதில் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்.

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்து உள்ளார். அந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு இதுவரையிலும் அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கட்டிட தொழிலாளியின் குடும்பத்துக்கு உதவ அரசு முன்வர வேண்டும். அ.தி.மு.க.வில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. அதைப்பற்றி பேச நான் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story