அரியலூரில் சுதந்திர தினவிழா: தேசிய கொடியை கலெக்டர் லட்சுமிபிரியா ஏற்றினார்


அரியலூரில் சுதந்திர தினவிழா: தேசிய கொடியை கலெக்டர் லட்சுமிபிரியா ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2017 4:30 AM IST (Updated: 16 Aug 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் லட்சுமி பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் உலக ஒற்றுமைக்கான சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

அதைத்தொடர்ந்து போலீசார், பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் இதர படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 19 அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதக்கங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுப்புற நடனமும், கொல்லாபுரம், கெலன்கெல்லர் செவித்திறன் குறையுடைய மாணவர்கள் சார்பில் தேசப்பற்று நடனமும், அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், அன்னிமங்கலம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி சார்பில் நாட்டுப்புற நடனமும், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுப்பற்று நாடகமும், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பிரமிடு அமைத்தலும், அரியலூர் துப்பறியும் நாய்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

பின்னர், மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், வட்டாட்சியர் முத்துகிருஷ் ணன், துணை கலெக்டர்கள், கல்வித்துறை, வருவாய்துறை, வளர்ச்சி துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆணையர் வினோத் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதேபோல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணன், முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சீனிவாசன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கோதை வரவேற்றார். விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) லதா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் சுதந்திர தினவிழா அந்தந்த பள்ளி தலைமை யாசிரியர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அதேபோல் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. திருமானூர், வெங்கனூர், கீழப்பழுவூர், தூத்தூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. 

Related Tags :
Next Story