“குணம் அடையும் முன்பே வீட்டுக்கு செல்ல வற்புறுத்துகின்றனர்” அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது பெற்றோர் புகார்


“குணம் அடையும் முன்பே வீட்டுக்கு செல்ல வற்புறுத்துகின்றனர்” அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 17 Aug 2017 3:45 AM IST (Updated: 17 Aug 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

கைப்பந்து பயிற்சி பெறுமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற மாணவி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் குணமடைவதற்கு முன்பே டிஸ்சார்ஜ் செய்வதாக டாக்டர்கள் மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள எஸ்.கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் மூவேந்திரன், தோட்டத்தொழிலாளி. இவரது மகள் சுகன்யா (வயது 14). சின்னாளப்பட்டியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் சுகன்யாவை கைப்பந்து பயிற்சி பெறுமாறு தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர். பயிற்சிக்குச் சென்றால் மாலையில் வீடு திரும்பத் தாமதமாகும் என்றும், 3 கிலோ மீட்டர் தூரம் தனியாக நடந்து செல்ல வேண்டும் என்றும் கூறி சுகன்யாவும், அவரது தந்தையும் கைப்பந்து பயிற்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து சுகன்யாவை கட்டாயப்படுத்தி வந்தது. இதனால் மனம் உடைந்த சுகன்யா கடந்த மாதம் (ஜூலை) 11–ந் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள 70 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை காப்பாற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பின்பு மேல் சிகிச்சைக்காக சுகன்யா மதுரை அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கக் கட்டத்தில் உள்ள எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து விட்டதாகவும் சுகன்யாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்லுமாறும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து சுகன்யாவின் தந்தை மூவேந்திரன் கூறும்போது, கிணற்றில் குதித்ததில் சுகன்யாவுக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை கைக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். முதுகெலும்பில் பிரச்சினை இருப்பதால் அவரால் எழுந்து உட்காரகூட முடியவில்லை. அதற்குள் வீட்டுக்குச்செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.

தகவல் அறிந்ததும் ஒலிம்பிக் சங்கத் துணைத்தலைவர் சோலை ராஜா ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் மாணவியின் நிலை குறித்து அறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சம்பவத்தோடு தொடர்புடைய பள்ளி ஆசிரியர்களை காப்பாற்றுவதற்காக சிறுமியை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற டாக்டர்கள் முயற்சி செய்கின்றனர். மாணவி குணமடைவதற்கு முன்பாக வீட்டுக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம்“ என்றார்.

ஆஸ்பத்திரி டீன்(பொறுப்பு) மருதுபாண்டியிடம் கேட்டபோது, “மாணவி சுகன்யா முழு குணமடைந்த பின்பே வீட்டுக்கு அனுப்பப்படுவார். இதுதொடர்பாக மருத்துவர்களுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது“ என்று தெரிவித்தார்.


Next Story