விருதுநகரில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது நகராட்சி அலுலகம் முற்றுகை
விருதுநகரில் 30, 31 வார்டு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வீடுகளில் புகுந்துள்ளதோடு, குடிநீரிலும் கலப்பதால் உரிய நடவடிக்கை கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகரில் கடந்த 9 ஆண்டுகளாக பணிகள் முழுமையாக முடிவடையாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இத்திட்டம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பினை நீக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் புகுந்து விடுவதோடு, குடிநீரிலும் கலக்கும் நிலை உள்ளது.
விருதுநகர் 30 மற்றும் 31–வது வார்டுகளில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அடைப்பினை நீக்க நடவடிக்கை கோரி நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் வீடுகளில் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் குடிநீரிலும் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்தது.
அப்பகுதி மக்கள் முன்னாள் கவுன்சிலர்கள் நாகேந்திரன், கலாவதி ஆகியோர் தலைமையில் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆணையாளர் சந்திரசேகரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அடைப்பு எடுக்கும் எந்திரம் பழுதாகி உள்ள நிலையில் அதனை சரி செய்ய அனுப்பி உள்ளதால் அடைப்பை எடுக்க தாமதம் ஏற்பட்டு விட்டது என்றும் ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.
விருதுநகர் பழைய பஸ் நிலைய நுழைவு வாயிலில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்றும், கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.