தமிழக மாணவர்களின் வளர்ச்சி, விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழக மாணவர்களின் வளர்ச்சி, விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2017 12:00 AM GMT (Updated: 2017-08-25T00:43:31+05:30)

தமிழக மாணவர்கள் எந்த பொது தேர்வுகள் வந்தாலும் அதை சந்திக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி–பதில்கள் தயாரித்து வழங்கப்படும்.

தாம்பரம்,

எதிர்காலத்தில் தமிழக மாணவர்களின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ–மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அறிவித்து தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் சார்பில் வருகிற 30–ந்தேதி வரலாற்று படைக்கிற நிகழ்ச்சியாக காஞ்சீபுரம் மண்ணில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் தமிழக மாணவர்கள் பல்வேறு பொது தேர்வுகளை சந்திப்பதற்கு ஏதுவாக பள்ளி கல்வி துறை மூலமாக 54 ஆயிரம் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை தயாரித்து இன்னும் 1½ மாத காலத்தில் உயர் மட்ட கல்வி குழுவோடு கலந்து பேசி பரிசீலனைக்கு பிறகு வெளியிடப்படும்.

இதுதொடர்பாக மாணவர்களுக்கு 450 மையங்களில் பயிற்சி வழங்கப்படும். 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். கேள்வி–பதில்கள் வெளியிடப்படுகின்ற போது மத்திய அரசு கொண்டு வருகிற எந்த பொதுத்தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் அளவுக்கு தமிழக மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள். எதிர்காலத்தில் தமிழக மாணவர்களின் வளர்ச்சி விண்ணை முட்டுகிற அளவு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு திவாகரன் ஆதரவு தெரிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அரசியல் கருத்துகளை தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி அமைச்சர் கருத்து கூற மறுத்து விட்டார்.

விழாவில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story