உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட கொறடா மீது வழக்கு தொடருவோம் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி


உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட கொறடா மீது வழக்கு தொடருவோம் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2017 12:00 AM GMT (Updated: 24 Aug 2017 11:59 PM GMT)

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட கொறடா மீது வழக்கு தொடருவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளையொட்டி டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்து உள்ளார். இது குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்தநிலையில் புதுவை சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும்வகையில் அரசு கொறடாவின் செயல்பாடு உள்ளது. இதனால் அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம். அரசு கொறடா உத்தரவை மீறி நாங்கள் சட்டப்பேரவையில் செயல்பட்டிருந்தால் தான் அவரால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. 19 எம்.எல்.ஏ.க்கள் இணைந்து இருப்பதையே அவர்களால் பொறுக்க முடியவில்லை.

ஸ்லீப்பர் செல்போல் இன்னும் 50 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் எங்களுடன் சேரக்கூடாது என்ற குருட்டு சிந்தனையில் செயல்படுகின்றனர். நாங்கள் அ.தி.மு.க.வில் தான் உள்ளோம். இதில் கட்சித் தாவல் எங்கே வந்தது. சட்டப்பேரவையில் தனியாக பிரிந்து செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்பட்ட கொறடா மீது வழக்கு தொடருவோம்.

அரசுக்கு எதிராக ஊழல் புகார் கூறி செயல்பட்டு, பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து பதவி தருகின்றனர். நாங்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்காக காத்து இருக்கிறோம். எங்களுக்கு கொறடா அளித்த நோட்டீஸ் குறித்து கவலை இல்லை. ஸ்லீப்பர் செல்போல் உள்ள எம்.எல்.ஏக்களை மிரட்டவே இந்த செயலை செய்கின்றனர். 9 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் வைத்து இருந்தார்.

நாங்கள் 19 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக இருப்பது அவர்கள் கண்ணை உறுத்துகிறது. டி.டி.வி. தினகரன் கண்டிப்பாக இங்கு வருவார். எப்போது என்பதை சொல்ல இயலாது. பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் அறையில் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் 7 எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.

Next Story