பூந்தமல்லி எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீசி தாக்குதல் இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு


பூந்தமல்லி எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீசி தாக்குதல் இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Aug 2017 10:45 PM GMT (Updated: 25 Aug 2017 8:30 PM GMT)

பூந்தமல்லி எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீசி தாக்குதல் நடந்த சம்பவத்தில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

பூந்தமல்லி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை. இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர். புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தற்போது ஏழுமலை தங்கி உள்ளார். கடந்த 23–ந் தேதி திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏழுமலையை, டி.டி.வி.தினகரன் நியமித்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பூந்தமல்லியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை கடந்த 23–ந்தேதி முற்றுகையிட்டு ஏழுமலையை காணவில்லை எனக்கூறி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. ஏழுமலையின் வீட்டின் முன்பு திரண்ட மணிமாறன் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பி அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஏழுமலை ஆதரவாளர்கள் மணிமாறனின் காரின் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். போலீசார் இருதரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர்.

பின்னர் ஏழுமலை வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரும் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதனிடையே ஏழுமலை வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கூறி தண்ணீர்குளம் பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story