சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:30 PM GMT (Updated: 2017-08-26T02:13:31+05:30)

சங்கராபுரம் அருகே தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் காலனியில் சுமார் 350–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக சரியான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலிகுடங்களுடன் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, சங்கராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவண்ணாமலை–சங்கராபுரம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மூர்த்தி உள்பட 20 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story