மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய காவல்துறை நண்பனாக செயல்படும்

மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய காவல்துறை நல்ல நண்பனாக செயல்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில், பெண் குழந்தைகள் சந்திப்பு நிகழ்ச்சி, அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), ஞான பிரகாசி (அனைத்து மகளிர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:–
பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வளர்க்கும்போது ஆண்– பெண் என்ற ஏற்றத்தாழ்வு பார்க்க கூடாது. அனைத்து குழந்தைகளையும் சரிசமமாக வளர்க்க வேண்டும். பெண்கள் படித்து முடித்தவுடன், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே பெற்றோர்கள் அக்கறை காட்டுகின்றனர். இதனால் பெண்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து விடுகிறது. திருமணத்துக்கு பிறகு பல்வேறு துன்பங்களை சந்திக்கும் பெண்களில் 2 சதவீதம் பேர்தான் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கின்றனர்.
மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த துறையில் உயரிய லட்சியத்தை நிர்ணயித்து, அதனை அடைய படிப்படியாக முயற்சி செய்ய வேண்டும். மாணவிகள் தங்களுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்யலாம். அந்த போலீஸ் நிலையம் சார்பில், வாரந்தோறும் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மாணவிகள் உயர்கல்வி பயில தடையாக உள்ள வறுமை, பொருளாதார வசதி இல்லாமை போன்றவற்றை அகற்றவும் காவல்துறை துணை நிற்கும். மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய காவல்துறை நல்ல நண்பனாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 2–வது நாளாக ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் பெண் குழந்தைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை தாங்கி பேசினார். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.