புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது
x
தினத்தந்தி 25 Aug 2017 10:30 PM GMT (Updated: 2017-08-26T02:15:33+05:30)

உளுந்தூர்பேட்டையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டார்கோவில் பகுதியில் இருந்து மேம்பாலம் செல்லும் சாலையோரத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும், கடையை உடனே மூடவேண்டும் என்று கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியபடி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்பார்த்த கடை ஊழியர்கள் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூடிவிட்டு, அதிகாரிகளுக்கும், உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரபூபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சென்ற சில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் டாஸ்மாக் கடை ‌ஷட்டர் மீது கற்களை வீசிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story