நார்த்தாமலை, கறம்பக்குடி, கீரனூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு


நார்த்தாமலை, கறம்பக்குடி, கீரனூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 25 Aug 2017 10:26 PM GMT (Updated: 25 Aug 2017 10:26 PM GMT)

நார்த்தாமலை, கறம்பக்குடி, கீரனூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீரனூர்,

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நார்த்தாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நார்த்தாமலை, வெள்ளனூர், வடசேரிப்பட்டி, ராயவயல், சித்துப்பட்டி, விளத்துப்பட்டி, கீழக்குறிச்சி, மேலூர், பொம்மாடிமலை போன்ற இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நார்த்தாமலை முத்துமாரியம்மன்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிதசனம் செய்தனர்.

கறம்பக்குடி தாலுகா பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் கறம்பக்குடி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் ரெகுநாதபுரம், மழையூர், சூரக்காடு, வெட்டன் விடுதி, துவார் உள்ளிட்ட இடங்களில் சென்ற ஆண்டை போல இந்தாண்டும் போலீசார் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கீரனூர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கீரனூர் தாலுகா சாலையில் உள்ள கோட்டைமேடு விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. இதேபோல கிருஷ்ண ஊரணி கரையில் உள்ள அதிகார விநாயகர், தாலுகா அலுவலகத்தில் உள்ள செல்வவிநாயகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கீரனூர் சிவன்கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story