காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்


காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Aug 2017 10:15 PM GMT (Updated: 2017-08-26T23:53:51+05:30)

புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் திருவிழா அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த புண்ணிய காலத்தில் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடினால் அனைத்து வகை பாவங்களும் நீங்கி, வாழ்வில் வளமையும், செழிப்பும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது தான், காவிரி புஷ்கரம் விழாவின் தனி சிறப்பாகும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து காவிரி ஆற்றில் புனிதநீராடி சாமி வழிபாடு செய்வார்கள்.

இந்த விழாவின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புஷ்கரம் விழா பொறுப்பாளரும், கலால் உதவி ஆணையருமான வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பொறுப்பு) காமராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விழா குழு தலைவர் ராமானந்த மகராஜ் சுவாமிகள் பேசுகையில், விழா நடைபெறும் 12 நாட்களும் காவிரியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று புஷ்கரம் விழா பொறுப்பாளரிடம் கேட்டு கொண்டார்.

கூட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார மேலாண்மை, தற்காலிக கழிவறை, பக்தர்கள் புனிதநீராடியவுடன் காவிரி கரை அருகே ஆடைமாற்றும் அறைகள், சாலைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. காவிரியின் துலாகட்ட பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் மடாதிபதிகள் புனித நீராடவும், ஆண்கள், பெண்கள் தனித்தனியாக புனித நீராடவும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி-கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் காவிரி புஷ்கரம் விழா குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சென்னை மகாலட்சுமி, துணை தலைவர்கள் ஜெகவீரபாண்டியன், ஏ.டி.எஸ்.தமிழ்ச்செல்வன், செந்தில்வேல், செயலாளர் முத்துக்குமரசாமி, இணை செயலாளர் அப்பர்சுந்தரம், துணை செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சீத்தாராமன், தாசில்தார்கள் காந்திமதி, பெருமாள், சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன், நகராட்சி உதவி பொறியாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story