தமிழக மீனவர்கள் 76 பேர் விடுதலை இலங்கை அரசு முடிவு


தமிழக மீனவர்கள் 76 பேர் விடுதலை இலங்கை அரசு முடிவு
x
தினத்தந்தி 31 Aug 2017 7:15 AM IST (Updated: 31 Aug 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 76 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.

ராமேசுவரம்,

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடிக்கச்செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 80 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறைகளில் அடைத்தனர். இதேபோல 160–க்கு மேற்பட்ட படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 43 படகுகள் விடுவிக்கப்பட்டு உள்ளன.

மீதம் உள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கக்கோரி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து மத்திய–மாநில அரசுகளிடமும் வலியுறுத்தி வந்தனர். மத்திய அரசும் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு செல்கிறார்.

இதை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக, தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ராமேசுவரத்தை சேர்ந்த 12 பேர், மண்டபத்தை சேர்ந்த 6 பேர், நம்புதாளையைச் சேர்ந்த 4 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 46 பேர், நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 76 மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.

இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு இன்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டு மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இதையடுத்து கெய்ட்ஸ் கோர்ட்டில் 76 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள்.

அதன்பின் 76 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் அனைவரும் தமிழகம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தவிர அந்நாட்டு சிறையில் நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 மீனவர்கள் உள்ளனர். அவர்களும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் விடுதலையை வரவேற்றுள்ள நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம், ‘‘படகுகளை விடுவிப்பது தொடர்பாக அறிவிப்பு எதுவும் இல்லை. படகுகளையும் விடுவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


Next Story