சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக கூறி வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை போடும் கும்பல் நாராயணசாமி குற்றச்சாட்டு
சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக கூறி புதுவையின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஒரு கும்பல் தடை போடுகிறது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், பல்கலைக்கழகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிலையான திடக்கழிவு மேலாண்மை–2017 என்ற மாநில அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நகரம் மற்றும் கிராமபுற பகுதிகளில் 30 நாட்கள் நடத்த உள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று காலை லாஸ்பேட்டையில் உள்ள அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்க கருத்தரங்க கூடத்தில் நடந்தது. விழாவிற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள தெருக்களில் குப்பைகளை அப்புறப்படுத்தும் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
2018–க்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற கழிப்பிடம் இல்லாத வீடுகளில் கழிப்பிடம் கட்டிக்கொள்ள ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மாகியில் திறந்தவெளி கழிப்பிடம் என்பது இல்லை. காரைக்கால் டி.ஆர்.பட்டினம் கிராமத்தை தத்தெடுத்து அனைத்து வீடுகளிலும் கழிப்பிடம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காரைக்கால் முழுவதும் வீடுகளுக்கு சென்று குப்பைகள் தரம் பிரித்து பெறப்படுகிறது. புதுச்சேரியிலும் அவ்வாறு குப்பைகளை சேகரிக்க ஒப்பந்தம் போட்டு இருந்தாலும் வீடுகளில் நேரடியாக தரம் பிரித்து குப்பைகளை பெற முடியாத சூழல் உள்ளது. நகராட்சி தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் புதுச்சேரி மற்றும் உழவர்கரை பகுதியில் தனியார் நிறுவனத்தால் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இதற்காக மாதம் ரூ.1 கோடியே 87லட்சம் செலவு செய்யப்படுகிறது. காரைக்கால் பகுதியில் ரூ.55 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அதனால் தான் புதுச்சேரி எழில் மிகுந்த பகுதியாக உள்ளது. இருப்பினும் முழுமையான எழில்மிகு நகரமாக புதுவை மாறவில்லை. மக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் அதை மாற்ற முடியும்.
மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், மருத்துவ கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், வேதியியல் கழிவுகள் என உள்ளன. இதில் சில கழிவுகள் வெளியில் எடுக்கும்போது சுவாசித்தாலே நோய்கள் வரும். குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை மக்கள் ஒத்துழைப்பு இன்றி அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மட்டும் செய்துவிட முடியாது.
புதுச்சேரி நகரில் பழைய வீடுகளை இடித்து, புதிய வீடுகளை கட்டுபவர்கள் இடித்த வீட்டு கழிவுகளை அப்புறப்படுத்துவதில்லை. அதை நகராட்சிதான் அப்புறப்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அது அவர்களது கடமை மற்றும் பொறுப்பு ஆகும். குப்பைகளை தொட்டியில் போடுவதும் மக்களின் கடமையாகும். அவ்வாறு செய்யாமல் வெளியில் வீசுவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நாடகம், பாட்டு, கதை மூலம் கிராமப்புற மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குரும்பாபேட் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்ற அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
புதுவையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த விடமால் ஒரு கும்பல் தடை போடுகிறது. அவர்கள் மட்டும் நகர பகுதியில் சவுகரியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். பசுமை தீர்ப்பாயத்தை அணுகி அரசு குருமாம்பேட்டில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதை அவர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
புதுச்சேரியில் அதிகாரத்தில் இருப்பவர் அமைச்சர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்கிறார். இதற்காக அவர் பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்கிறார். அவ்வாறு கிடைத்தால் தண்டனை எங்களுக்கு மட்டுமில்லை, அவருக்கும் தான் என்பதை மறந்து விட்டார்.
புதுச்சேரியில் துறைமுகம் செயல்பாட்டிற்கு வர முகத்துவாரத்தில் மணல் தூர்வாரப்பட்டது. அப்போது நீண்டகாலமாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கடலில் கலக்கப்பட்டதால் கருப்பாக சிறிதளவு மணல் வந்தது. உடனே அந்த கும்பல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கோஷம் எழுப்பினர். புதுச்சேரி வளர்ச்சிக்கான எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தடுத்து நிறுத்துகின்றனர்.
புதுச்சேரியில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், வருமானம் பெருக வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். திட்டங்கள் வரக்கூடாது என்றால் மாநிலம் எப்படி வளர்ச்சி பெறும்.
குஜராத் மாநிலம் சூரத் காந்தி நகரில் மேம்பாலத்தின் கீழ் குடிசைகளில் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக நடுரோட்டில் நிற்கின்றனர். புதுச்சேரியில் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக புதுச்சேரியின் வளர்ச்சியை தடுக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் அனிசா பஷிர்கான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் துறை செயலர் மிகிர்வர்தன், இயக்குனர் துவாரகநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.