மும்பையில் இயல்பு நிலை திரும்புகிறது கனமழைக்கு 8 பேர் பலி மாயமான டாக்டர் உள்பட 13 பேரை தேடும் பணி தீவிரம்


மும்பையில் இயல்பு நிலை திரும்புகிறது கனமழைக்கு 8 பேர் பலி மாயமான டாக்டர் உள்பட 13 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 Aug 2017 5:00 AM IST (Updated: 31 Aug 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மழை வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியான தானே, பால்கரில் மழைக்கு 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பை,

மும்பையில் மழை வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியான தானே, பால்கரில் மழைக்கு 8 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் டாக்டர் உள்பட 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வரலாறு காணாத மழை

மும்பையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை கொட்டியது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் மும்பையில் 316 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இதனால் நகரில் உள்ள எல்லா சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. தண்டவாளங்கள் மழைநீரில் மறைந்தன. எனவே ரெயில், சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் அலுவலகங்கள், ரெயில்நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்தனர்.

ரெயில், பஸ்களில் நடுவழியில் சிக்கிய மக்கள் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் அதிலேயே இருக்க வேண்டிய அவலமும் அரங்கேறின.

வக்கீல் சாவு

இதற்கிடையே மும்பையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு 2 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. இதில் சயான் நெடுஞ்சாலையில் வெள்ளநீரில் சிக்கிய கார் ஒன்றில் ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் காரின் கதவை உடைத்து மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது பெயர் பிரியம் மித்தியா(வயது30) என்றும், வக்கீலாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

அசல்பா பகுதியில் மழை காரணமாக நேற்று முன்தினம் அங்குள்ள மின்நிலைய சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ரமேஷ்வர் திவாரி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டாக்டர் மாயம்

பாம்பே ஆஸ்பத்திரி டாக்டர் தீபக் அம்ரபுர்கர் என்பவர் பணி முடிந்து பரேல் பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்தது தெரியவந்தது.

காந்திவிலி லால்ஜி பாடா பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழிமுக கால்வாயில் சென்ற வெள்ளநீரில் சிக்கி மூழ்கினார். அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

தாதர் பகுதியில் வாலிபர் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்து மாயமானார்.

விக்ரோலியில் உள்ள சூர்யா நகர், பஞ்சசீல் நகர் பகுதியில் கழிமுக கால்வாயில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு இருந்த 2 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் 2 வீடுகளில் இருந்த 1½ வயது குழந்தை, சிறுமி கல்யாணி(2) உள்பட 4 பேர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டர் உள்பட 7 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தானே, பால்கரில்...

இதேபோல மும்பையை அடுத்த தானே மற்றும் பால்கரிலும் மழை வெள்ளத்துக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் தானேயில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 பேர் மாயமானார்கள்.

இதேபோல தானே மாவட்டம் நவிமும்பை கன்சோலி பகுதியில் உள்ள ஆற்று வெள்ளத்தில் 2 சிறுவர்கள் அடித்து செல்லப்பட்டனர். பால்கரில் 3 பேர் பலி ஆனார்கள். மேலும் ஒருவர் மாயமானார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநாயகர் மண்டல்கள், அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் உணவு பொட்டலங்கள், தேனீர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக நடுவழியில் நின்ற ரெயில் மற்றும் ரோடுகளில் சிக்கிய வாகனங்களில் இருந்தவர்களை தேடிச்சென்று பொதுமக்கள் உணவு மற்றும் குடிநீர் வழங்கியது நெகிழ வைக்கும் வகையில் இருந்தது.

இது குறித்து கிங்சர்க்கிள் பகுதியில் பெஸ்ட் பஸ்சில் சிக்கிய பெண் பயணி ஒருவர் கூறுகையில், ‘‘ மதியம் 1.30 மணியளவில் தாதர் நோக்கி சென்ற பஸ்சில் ஏறினேன். ஆனால் இரவு 1 மணி வரை பஸ் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. எனினும் பலர் உணவு, தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து உதவி செய்தனர்’’ என்றார்.

போர்க்கால பணி

இந்தநிலையில் சாலைகள், தண்டவாளங்களில் தேங்கிய வெள்ளநீரை வடிய வைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளம் தேங்கிய இடங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் நீர் உறிஞ்சு வெளியேற்றப்பட்டது. மும்பையில் சுமார் 100–க்கும் அதிகமான இடங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீர் அகற்றப்பட்டது. மாநகராட்சியினர் நேற்று முன்தினம் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.

இதேபோல பொதுமக்களின் வசதிக்காக பேரிடர் மீட்பு படையினர், மாநகராட்சியினரின் 24 மணிநேர உதவி மையம் செயல்பட்டது. மேலும் மும்பை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் மழையை பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் பொதுமக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பு பஸ்கள்

எனினும் நேற்று அதிகாலை 2 மணிக்கு பிறகே கிழக்கு மற்றும் மேற்கு விரைவு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஓரளவு சீராக தொடங்கியது. எனினும் நேற்று காலை வரை மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. ரெயில்சேவை தொடங்குவதில் தாமதமானதால் இரவு விடிய விடிய ரெயில் நிலையங்களில் இருந்த மக்கள் காலையில் வீடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே இதை சமாளிக்க பெஸ்ட் நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இயல்பு நிலைக்கு திரும்புகிறது

இதற்கிடையே ரெயில்சேவை தொடங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் நேற்று நள்ளிரவு சி.எஸ்.எம்.டி. ரெயில்நிலையத்தில் ரெயில்வே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை தாதர் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் ரெயில்நிலைய மேலாளருடன் தகராறு செய்தனர். இந்தநிலையில் மத்திய ரெயில்வேயில் ரெயில் போக்குவரத்து நேற்று மதியத்திற்கு பிறகே தொடங்கியது. அதிலும் ரெயில்கள் தாமதமாகவே இயக்கப்பட்டன. மேற்கு ரெயில்வேயில் காலை முதலே ரெயில் சேவை தொடங்கியது. அதனால் அந்த வழித்தட பயணிகள் விரைவில் வீடு திரும்ப முடிந்தது.

பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து நேற்று மும்பையில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் வானிலை ஆய்வு மையம் மீண்டும் பலத்த மழை பெய்யும் என அறிவித்து இருந்ததால் நேற்று பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

பள்ளி, கல்லூரிகள் தவிர பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியே காணப்பட்டது.


Next Story