அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி 2–வது நாளாக மாணவர்கள் போராட்டம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி 2–வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மாணவ–மாணவிகள் கருப்பு பட்டை அணிந்து மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். நிதி நிலை நெருக்கடியில் சிக்கி தவித்ததால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013–ம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது.
மருத்துவ கல்லூரியில் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவம்(எம்.பி.பி.எஸ்), பல் மருத்துவத்தில் இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
வழக்கம்போல் நேற்றும் கல்லூரிக்கு மருத்துவ மாணவ–மாணவிகள் வந்தனர். அவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பின்னர் கருப்பு பட்டை அணிந்து, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், அரசு கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யும் கட்டணத்தையே, இந்த கல்லூரி மாணவர்களுக்கும் நிர்ணயம் செய்யவேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
2–வது நாளாக நேற்றும் மருத்துவ மாணவ–மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல் மருத்துவ கல்லூரி வளாகம் பரப்பரப்பாக காணப்பட்டது.