மாணவியின் புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக வெளியிட்டு மிரட்டிய பாடகர் கைது


மாணவியின் புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக வெளியிட்டு மிரட்டிய பாடகர் கைது
x
தினத்தந்தி 1 Sept 2017 5:45 AM IST (Updated: 1 Sept 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

பல் மருத்துவக்கல்லூரி மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு மிரட்டிய பாடகரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரம் செல்ல பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் நிக்கில் ஜாட்டின் சர்மா(வயது 34). இவருக்கும், சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

அந்த பெண், தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த 1 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். நிக்கில் ஜாட்டின் சர்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவருடனான தொடர்பை மாணவி துண்டித்தார்.

இதில் ஆத்திரமடைந்த அவர், கல்லூரி மாணவியுடன் தான் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் ஆபாசமாக வெளியிட்டு அவரை மிரட்டினார்.

இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிக்கில் ஜாட்டின் சர்மாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் பாப் பாடகராக உள்ளது தெரிந்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

* பொத்தேரி–கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* வியாசர்பாடி ஏ.கல்யாணபுரத்தை சேர்ந்த சின்னராஜ் (25) என்பவரை, குடிபோதையில் வந்த அவரது தம்பி வினோத்குமார் (22) கத்தியால் தாக்கினார். இதுதொடர்பாக வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

* கொடுங்கையூர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (42), மதுரவாயல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சேகர் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Next Story