7–ம் வகுப்பு மாணவி துக்குப்போட்டு தற்கொலை, போலீசார் விசாரணை
7–ம் வகுப்பு மாணவி துக்குப்போட்டு தற்கொலை, சாவுக்கான காரணம் என்ன? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுவை நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் சித்ரா. இவர் துணிகடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் லோகதர்ஷினி (வயது12). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.
சித்ரா வேலைக்கு செல்வதால், மாணவி லோகதர்ஷினி தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வீட்டில் துணிகளை மாற்றிக்கொண்டு, அருகில் அவருடைய பெரியம்மா விஜயா என்பவருடைய வீட்டிற்கு செல்வாராம். அங்கு அவர், வீட்டுப்பாடங்களை முடிப்பார். பின்னர் அவரை, வேலையை முடித்துவிட்டு சித்ரா வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மாணவி லோகதர்ஷினி நேற்று பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். விஜயாவின் வீட்டிற்கு வழக்கமாக மாலை 6 மணிக்கு லோகதர்ஷினி வந்துவிடுவாராம். நேற்று வெகு நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த விஜயா, தனது தங்கை சித்ராவின் வீட்டிற்கு சென்று பார்த்தார்.
அப்போது லோகதர்ஷினி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கியதை கண்டு விஜயா அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் லோகதர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லோகதர்ஷினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி லோகதர்ஷினி சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.