சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குவது ஒவ்வொரு மாணவர்களின் கடமையாகும்
சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத சமுதாயத்தை உருவாக்குவது ஒவ்வொரு மாணவர்களின் கடமையாகும் என்று சிவகங்கையில் நடந்த விழாவில் கலெக்டர் லதா கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க விழா சிவகங்கையில் உள்ள மான்போர்டு பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். மான்போர்டு பள்ளி தாளாளர் ஜோசப் முன்னிலை வகித்தார். சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார்.
பின்னர் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் லதா பேசியதாவது:– தற்போது சாலை விபத்துகள் அதிகம் நடப்பதால் அவைகளை கட்டுப்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை தெரிந்து கொள்வதுடன், அவர்கள் மூலம் பெற்றோர்களுக்கும் இதை எளிதில் தெரியவைக்க முடியும். இதனால் தான் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தற்போது தொடங்கி வைக்கப்படும் விழிப்புணர்வு முகாம் ஓராண்டுக்கு மாவட்டத்தில் உள்ள 200 பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்ட பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்த போர்டுகள் வைக்கப்பட உள்ளது. இத்துடன் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒருசில நாட்களில் இதுகுறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்படும். மாணவர்கள் ஹெல்மேட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மேலும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத சமுதாயத்தை உருவாக்குவது ஒவ்வொரு மாணவர்களின் கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.