நகை பறிப்பு, வாகன திருட்டு வழக்குகளில் அண்ணன்–தம்பி உள்பட 5 பேர் கைது
அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதிகளில் நகை பறிப்பு, வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அண்ணன்–தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதிகளில் நகை பறிப்பு மற்றும் வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, காரியாபட்டி சப்–இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு தனபால் ஆலோசனையின்பேரில் நகை பறிப்பு மற்றும் வாகன திருட்டு குறித்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த மாதம் அருப்புக்கோட்டை மணிநகரத்தில் ஆனந்தன் என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் தனிப்படையினரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் காணாமல் போன இருச்சக்கர வாகனம் குறித்து பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் 2 தினங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை காந்திநகர் விலக்கில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், ஆனந்தனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட நபர் அருப்புக்கோட்டையை அடுத்த செட்டிக்குறிச்சி, வாழ்வாங்கியை சேர்ந்த பாண்டி மகன் செல்வக்குமார்(வயது 23) என்பதும், இரு சக்கர வாகனத்தை தனது அண்ணன் முத்துக்குமாருடன்(32) சேர்ந்து திருடியதாக ஒப்புக்கொண்டர். மேலும் திருடிய வாகனத்தை பயன்படுத்தி காரியாபட்டி பள்ளி ஆசிரியை லாவன்யா சுகந்தி மற்றும் சாத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து செல்வக்குமார், முத்துக்குமாரை கைது செய்த போலீசார், அவர்களது கூட்டாளிகளான சாத்தூர் சுந்தரகுடும்பன்பட்டியை சேர்ந்த பால்ராஜ் மகன் பொன்ராஜ்(40), லட்சுமணன் மகன் அழகுவேல்(21), சாத்தூர் சிவந்திபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் ஆறுமுகம்(66) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் சேர்ந்து சாத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் மேல் விசாரணையில் தெரியவந்தது.