உயிரை பறிக்கும் நீல திமிங்கலம் விளையாட்டு: பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


உயிரை பறிக்கும் நீல திமிங்கலம் விளையாட்டு: பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 2 Sept 2017 4:15 AM IST (Updated: 2 Sept 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

நீல திமிங்கலம் விளையாட்டை மாணவர்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் பள்ளிக்கு நேரில் சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல்,

புளூவேல் எனும் நீல திமிங்கல விளையாட்டில் சிக்கி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். உயிரை பறிக்கும் இந்த விளையாட்டை, மாணவர்கள் தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார்.

இதையடுத்து திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில், திண்டுக்கல் நகர போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி கலந்து கொண்டு பேசுகையில், புளூவேல் எனும் நீல திமிங்கல விளையாட்டு, விபரீதம் நிறைந்தது. சிறிய சாகசங்களை செய்ய சொல்லி இறுதியில் உயிரை பறிக்கும் விளையாட்டாக மாறிவிடும். எனவே, அதை விளையாடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். செல்போன், கணினியை கல்விக்காக மட்டும் பயன்படுத்துங்கள். மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, என்று அறிவுறுத்தினார். இதில் பள்ளி தாளாளர் முருகேசன், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்–இன்ஸ்பெக்டர்கள் அழகுராஜ், மகேஷ் மற்றும் போலீசார் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகேயுள்ள கணினி மையங்களில் சோதனை நடத்தினர். அப்போது அந்த மையத்தில் உள்ள கணினிகளில் நீல திமிங்கலம் விளையாட்டு இருக்கிறதா? என்று சோதனை செய்தனர்.

மேலும் நீல திமிங்கலம் விளையாட்டை பதிவேற்றம் செய்யக்கூடாது என்றும், விளையாடுவதற்கு யாராவது வந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதேபோல் அடிக்கடி அனைத்து கணினி மையங்களிலும் சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story