பழனி அருகே ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு–முற்றுகை 4 லாரிகள் பறிமுதல்
பழனி அருகே தனியார் நிறுவனம் சார்பில், ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்த இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெய்க்காரப்பட்டி,
பழனியை அடுத்த தாளையூத்து அருகே உள்ள நாகூரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குழாய்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வருகிறது. ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றின் அருகே அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில் 5–க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை சுத்திகரித்து விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட கிணற்றில் நீர்மட்டம் குறையத்தொடங்கியதால் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். பின்னர், ஏற்கனவே 5–க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ள நிலையில், மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்தால் எங்களுக்கு குடிநீரே கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். எனவே ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடமும், தனியார் நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது. தண்ணீரை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பேசிய அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் குடிநீரை விற்பனைக்காக கொண்டு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.