அருவங்காட்டில் பள்ளி மாணவரை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலைமறியல்


அருவங்காட்டில் பள்ளி மாணவரை தாக்கிய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Sept 2017 5:00 AM IST (Updated: 2 Sept 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

அருவங்காட்டில் பள்ளி மாணவரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தாக்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காணிக்கராஜ் நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் வில்சன் (வயது 14). இவர் அருவங்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்புவதற்காக மாணவர் வில்சன், அருவங்காடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளி மாணவிகள் சிலரும் அங்கு இருந்தனர்.

அப்போது அருவங்காடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், அங்கு வந்தார். அப்போது திடீரென்று பஸ் நிறுத்தத்தில் நின்று இருந்த மாணவர் வில்சனை லத்தியால் தாக்கினார். இதைப்பார்த்த மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் அருவங்காடு மெயின் கேட் பகுதியில் பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் 500–க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரனை கண்டித்து குன்னூர்–ஊட்டி ரோட்டில் நின்று கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மாணவரை தாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக குன்னூர்–ஊட்டி ரோட்டில் மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாணவர் வில்சன் கூறுகையில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், மாணவிகளை மாணவர்கள் கிண்டல், கேலி செய்வதாக புகார் வந்துள்ளதாக கூறி தாக்கியதாக தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கும் போது, அருவங்காடு பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் மாணவிகளை, சில மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதாக புகார் வந்துள்ளது. அதனை விசாரிக்கும் போது தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்கள்.

இந்த நிலையில் மாணவரை தாக்கிய சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


Next Story