பந்தலூர் அருகே வனத்துறையினரை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு


பந்தலூர் அருகே வனத்துறையினரை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 2 Sept 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே வனத்துறையினரை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்த வேட்டைத்தடுப்பு காவலர் உயிர் தப்பினார்.

பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, செம்பக்கொல்லி, கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.3 ஆகிய பகுதிகளில் 14 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன. இரவு நேரத்தில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன.

இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அய்யங்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் வந்து நிற்கின்றன. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகள் நடந்து செல்லும் பாதைகளில் விதிமுறைகளை மீறி மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டு யானைகள் வழி மாறி ஊருக்குள் அதிகளவு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்வேலிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் என்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.3– பகுதியில் காட்டு யானைகள் புகுந்தது. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் கணேசன், வன காப்பாளர்கள் ஜம்புலிங்கம், பிரகாஷ், ஜெயக்குமார், வேட்டைத்தடுப்பு காவலர் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் திடீரென்று வனத்துறையினரை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே வனத்துறையினர் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சமயத்தில் வேட்டைத்தடுப்பு காவலர் சுப்பிரமணி ஓடிய தவறி கீழே விழுந்தார். இதனால் காட்டுயானைகள் அவரை தாக்கும் நிலை ஏற்பட்டது. உடனே வனத்துறையினர் காட்டு யானைகளின் கவனத்தை திருப்பி, சுப்பிரமணியை மீட்டனர். இதனால் அவர் காயத்துடன் உயிர் தப்பினார். அதன்பிறகு காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அந்த யானைகள் சாமியார் மலை அடிவாரத்துக்கு இடம் பெயர்ந்து சென்றது.


Next Story