சிக்கமகளூருவில் வாடிக்கையாளர்கள் போல நடித்து கடையில் ரூ.1 லட்சம் தங்க நகைகள் திருட்டு


சிக்கமகளூருவில் வாடிக்கையாளர்கள் போல நடித்து கடையில் ரூ.1 லட்சம் தங்க நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 3 Sept 2017 2:00 AM IST (Updated: 3 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூருவில் வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகைக்கடையில் திருட்டு

சிக்கமகளூரு டவுன் எம்.ஜி.ரோட்டில் நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த நகைக்கடைக்கு 2 பெண்கள் உள்பட 7 பேர் நகைகள் வாங்க வந்துள்ளனர். அவர்களுக்கு நகைக்கடை உரிமையாளர் பல்வேறு ரக தங்க நகைகளை காண்பித்துள்ளார். அந்த நகைகளை பார்த்த அவர்கள், வேறு கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றனர். சிறிது நேரம் கழித்து நகைக்கடை உரிமையாளர் நகைகளை சரி பார்த்தார்.

அப்போது, ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது வாடிக்கையாளர்கள் போல வந்த 7 பேர், நகைக்கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து அவர், சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நகைக்கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story