பங்காருபேட்டையில், 5–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் தலைமறைவாக இருந்த சமையல்காரர் கைது
5–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதி சமையல்காரரை தனிப்படை போலீசார் நேற்று பிடித்து கைது செய்தனர்.
கோலார் தங்கவயல்,
பங்காருபேட்டையில் அரசு பெண்கள் விடுதியில், 5–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதி சமையல்காரரை தனிப்படை போலீசார் நேற்று பிடித்து கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பாலியல் பலாத்காரம்கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுனில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 10 வயது நிரம்பிய ஒரு சிறுமி தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி விடுதியில் உள்ள ஒரு அறையில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த விடுதி சமையல்காரர் நாராயணப்பா(வயது 50), அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு விடுதி கண்காணிப்பாளர் சிக்கண்ணா, ஊழியர் ராதா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
கைதுஇச்சம்பவம் குறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி கண்காணிப்பாளர் சிக்கண்ணா, ஊழியர் ராதா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான நாராயணப்பாவை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அவரை பிடிக்க பங்காருபேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் நாராயணப்பா தமிழ்நாடு ஒசூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று ஒசூருக்கு சென்று நாராயணப்பாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.