திருட்டு வழக்கில் வாலிபர் கைது 46 பவுன் நகை மீட்பு
திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 46 பவுன் நகை மீட்கப்பட்டது.
சோழிங்கநல்லூர்,
செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம்திருடப்பட்டு வந்தது. இந்த தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளியை பிடிக்க அடையாறு துணை ஆணையர் உத்தரவின்பேரில் துரைப்பாக்கம் உதவி ஆணையர் அய்யப்பன் மேற்பார்வையில் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோழிங்கநல்லூர் பள்ளிக்கூட சாலையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை செய்ததில் கடந்த சில மாதங்களாக செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர், 4–வது தெருவை சேர்ந்த பாபு (வயது 28) என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 46 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது.