மாணவி அனிதா தற்கொலை: பிரதமர் உருவபொம்மையை எரிக்க முயன்ற 11 பேர் கைது


மாணவி அனிதா தற்கொலை: பிரதமர் உருவபொம்மையை எரிக்க முயன்ற 11 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2017 5:00 AM IST (Updated: 3 Sept 2017 11:17 PM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

நாமக்கல்,

மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று நாமக்கல்லில் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடத்தினர். திருச்செங்கோட்டில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரிக்க முயன்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் காயத்ரி, இளங்கதிர், துணை செயலாளர் சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில துணை தலைவர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் உழவர்சந்தை வரை சென்று மீண்டும் பூங்கா சாலையில் முடிவடைந்தது. முன்னதாக மாணவி அனிதாவுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது மோர்பாளையத்தை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்கல் வள்ளிபுரம், என்.புதுப்பட்டி, கொசவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாணவி அனிதாவின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல மாணவி அனிதாவின் மறைவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழ் புலிகள் கட்சியின் சார்பிலும் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட கொள்கை பரபரப்பு செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் செந்தமிழன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர்கள் மாணவி அனிதா சாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை பறித்து சென்றனர். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பியவாறு பூங்கா சாலைக்கு ஊர்வலமாக வந்தனர்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்ட மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன், நகர செயலாளர் முத்துசாமி, திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன், ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென 2 பேர் பிரதமர் மோடி உருவ பொம்மையை கூட்டத்திற்குள் கொண்டு வந்து எரிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று போராட்டக்கார்களிடம் இருந்த உருவ பொம்மையை கைப்பற்றி எரிக்க விடாமல் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்து நகர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.


Next Story