மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்


மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Sept 2017 5:00 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் சென்னியப்பன். இவருடைய மகன் சம்பத் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு நசியனூர் ரோடு சாந்திநகர் பகுதியில் வீடு கட்டும் பணியில் இருந்தார். அந்த வீடு கிரக பிரவேசத்துக்காக நேற்று முன்தினம் இரவு பணிகள் நடந்து கொண்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சம்பத் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருந்தார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சம்பத் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து சென்று சம்பத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மின்சாரம் தாக்கி இறந்துபோன சம்பத்துக்கு சசிகலா என்ற மனைவியும், மனோஸ்ரீ(11), அபிஸ்ரீ(9) என்ற மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சம்பத்தின் உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தார்கள். அவர்கள் சம்பத்தின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆதரவின்றி இருப்பதால், சம்பத் கடைசியாக வேலை செய்த கட்டிடத்தின் உரிமையாளரும், என்ஜினீயரும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், உடனடியாக அவர்கள் இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் சம்பத்தின் உடலை பெற மாட்டோம் என்று கூறி திடீர் என்று அரசு ஆஸ்பத்திரியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 20 நிமிடம் இந்த போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story