மாநகராட்சி சார்பில் ‘மகிழ்ச்சி தெரு’ திட்டம் தொடக்கம்: நடுரோட்டில் விளையாடி மகிழ்ந்த தூத்துக்குடி நகர மக்கள்


மாநகராட்சி சார்பில் ‘மகிழ்ச்சி தெரு’ திட்டம் தொடக்கம்: நடுரோட்டில் விளையாடி மகிழ்ந்த தூத்துக்குடி நகர மக்கள்
x
தினத்தந்தி 4 Sept 2017 3:30 AM IST (Updated: 4 Sept 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், ‘மகிழ்ச்சி தெரு’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், ‘மகிழ்ச்சி தெரு’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி தூத்துக்குடி நகரில் வசிக்கும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நடுரோட்டில் விளையாடு மகிழ்ந்தனர்.

‘மகிழ்ச்சி தெரு’ திட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ‘தூய்மை தூத்துக்குடி’ என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், ‘மகிழ்ச்சி தெரு’ என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி போக்குவரத்து அதிகம் உள்ள பாளையங்கோட்டை ரோட்டில் மகிழ்ச்சி தெரு கொண்டாட்டம் நேற்று காலை நடந்தது. காலை 6 மணி முதல் 10 மணி வரை பாளையங்கோட்டை ரோட்டில் பழைய பஸ் நிலையம் முதல் ராமையா திருமண மண்டபம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அதேநேரத்தில் மாநகராட்சி முன்பும் பெரும்பாலான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கொண்டாட்டம்

இதையடுத்து போக்குவரத்து மிகுந்த ரோட்டில் வாகனங்கள் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து “வண்டியே வராது, வந்து விளையாடு“ என்ற கோ‌ஷத்துடன் மகிழ்ச்சி தெரு கொண்டாட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன், உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக நடிகர் பரணி கலந்து கொண்டு பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகிழ்ச்சி தெரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகள் கம்ப்யூட்டரிலேயே விளையாடிக் கொண்டு இருக்க கூடாது. இது போன்று திறந்தவெளியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்றார்.

பல்வேறு போட்டிகள்

தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. நடுரோட்டில் கைப்பந்து, இறகுபந்து, கிரிக்கெட், கோகோ, யோகா, ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, கேரம் உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடந்தன. பொதுமக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விளையாட்டுக்களை தேர்வு செய்து விளையாடினர். அதேபோன்று பொதுமக்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மேடை நடன நிகழ்ச்சிகள், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இந்த போட்டிகளில் தூத்துக்குடி மாநகர மக்கள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு உடைகள் அணிந்தபடி ஒவ்வொரு விளையாட்டாக விளையாடி மகிழ்ந்தனர். அதேபோன்று மாநகராட்சியின் சுகாதார திட்டங்கள், பாலித்தீன் பைகள் ஒழிப்பு, மரம் நடுதல், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story