சோமங்கலத்தில் மின்னல் தாக்கியதில் இளம்பெண் உடல் கருகினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
சோமங்கலத்தில் மின்னல் தாக்கியதில் உடல் கருகிய இளம்பெண், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பூந்தமல்லி,
சோமங்கலத்தில் மின்னல் தாக்கியதில் உடல் கருகிய இளம்பெண், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பூ பறித்தனர்காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த சோமங்கலம் பூந்தண்டலம், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 34). இவருடைய மனைவி வசந்தி(30). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வீட்டின் அருகே இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் சாமந்தி பூ பயிரிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் 5 பெண்களுடன் சேர்ந்து சந்திரசேகர் பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அவர்களுக்கு வசந்தி டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தார். பின்னர் அவரும் தோட்டத்தில் பூ பறிக்கும் வேலையில் ஈடுபட்டார்.
மின்னல் தாக்கி உடல் கருகினார்அந்த பகுதியில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த வசந்தியை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் சுருண்டு விழுந்தார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சந்திரசேகர் மற்றும் உடன் இருந்த பெண்கள் ஓடி வந்து வசந்தியை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றி சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.