‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பினர்
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூர் ரெயில் நிலையத்தை முஸ்லிம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, சமூகநீதி மாணவர் இயக்கத்தின் சார்பில் நேற்று திருப்பூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். முஸ்லிம் அமைப்பினரின் இந்த அறிவிப்பு படி காதர்பேட்டை பகுதியில் இருந்து ஏராளமான முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைகளில் கொடிகளை பிடித்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை ரெயில் நிலையத்தின் வெளியிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரெயில் நிலைய வாசலை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பினர் அங்கேயே போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பைசுல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, மாவட்ட பொருளாளர் முத்துமீரான், மாணவர் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஷேக் முகமது, மாணவர் அணி மாவட்ட பொருளாளர் காஜா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
முற்றுகை போராட்டத்தில், மத்திய–மாநில அரசுகளுக்கு எதிராகவும், ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கான இடத்தை ஒதுக்க வேண்டும். ‘நீட்’ தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.