திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தாய்–மகன் உள்பட 4 பேர் பலி


திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தாய்–மகன் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 5 Sept 2017 4:30 AM IST (Updated: 5 Sept 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தாய்–மகன் உள்பட 4 பேர் இறந்தனர். உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது அவர்களுக்கு இந்த பரிதாப முடிவு ஏற்பட்டது.

திண்டிவனம்,

காஞ்சீபுரம் மாவட்டம் போவூர் மகாத்மாகாந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அமுதா (வயது 45), மகன் ராஜேஷ்குமார் (21). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படித்து வந்தார். அமுதாவின் தங்கையான உஷா என்பவர் இறந்ததை தொடர்ந்து அவரது மகள் புனிதா (8), மகன் விஜயன் (7) ஆகியோரை அமுதா வளர்த்து வந்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள கொஞ்சிமங்கலம் கிராமத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அமுதா, ராஜேஷ்குமார், புனிதா, விஜயன் ஆகிய 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றனர்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை அதே மோட்டார் சைக்கிளில் அமுதா உள்ளிட்ட 4 பேரும் போவூருக்கு புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜேஷ்குமார் ஓட்டினார். திண்டிவனம் சாரம் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேஷ்குமார், புனிதா, விஜயன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயம் அடைந்த அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது குறித்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இறந்த ராஜேஷ்குமார், புனிதா, விஜயன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதாவை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அமுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த அமுதாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அமுதா உள்ளிட்ட 4 பேர்களின் உடலையும் பார்த்து கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story