நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2017 3:45 AM IST (Updated: 5 Sept 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கல்லூரி மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத ஏக்கத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குழுமூர் மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து அனிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி மத்திய–மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து கல்லூரியில் இருந்து புறப்பட்டு ராஜாஜி நகர், செந்துறை ரோடு, விளாங்கார தெரு, மார்க்கெட் தெரு வழியாக ஊர்வலமாக சென்று அரியலூர் பஸ்நிலையம் எதிரே நிறைவு செய்தனர். அங்கு அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் கூடினர். நீட் தேர்வுக்காக உச்சநீதிமன்றம் வரை போராடி மருத்துவ கனவு தகர்ந்ததால் உயிர்நீத்த மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அங்கேயே தரையில் அமர்ந்து நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனிதாவின் மறைவுக்கு நீதி கிடைக்க வேண்டும், மாநில அரசின் கல்வி அதிகாரங்களில் மத்திய அரசு இனி தலையிடாமல் இருக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், பிளஸ்–2 வில் அதிக மதிப்பெண் பெற்ற போதும் மருத்துவம் உள்ளிட்ட துறையை தேர்வு செய்து படிக்க முடியாத நிலை இந்த நீட் தேர்வினால் ஏற்பட்டிருக்கிறது. எனவே பழைய முறைப்படி பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக நீட் தேர்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை வேண்டும் என்று கூறினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story