பவானி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியது; பேரனுடன் பாட்டி சாவு
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் பேரனுடன் பாட்டி பரிதாபமாக இறந்தார். பிரசவமான மகளின் குழந்தையை பார்த்துவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
பவானி,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாளக்கரையை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சோமசுந்தரம் (வயது 28) என்ற மகனும், சாந்தி (25) என்ற மகளும் உள்ளார்கள். சோமசுந்தரத்துக்கு ரிஜிஸ் (1½) என்ற ஆண் குழந்தை இருந்தது. சோமசுந்தரம் தனது தாய், தந்தையுடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். சாந்தி திருமணம் ஆகி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தில் வசித்து வருகிறார். அவருக்கு சுபஸ்ரீ (3) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சாந்தி 2–வது முறை கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக சோமசுந்தரம் நேற்று காலை தனது தாய் ஜெயலட்சுமி, மகன் ரிஜிசை அழைத்துக்கொண்டு ஆவத்திபாளையத்தில் உள்ள சாந்தி வீட்டுக்கு சென்றார். அப்போது சாந்தி அவர்களிடம், சுபஸ்ரீயையும், கைக்குழந்தையையும் பார்க்க சிரமமாக உள்ளது. எனவே சுபஸ்ரீயை மட்டும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள்’ என்று கூறினார்.
எனவே சோமசுந்தரம் சுபஸ்ரீயையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஜெயலட்சுமி, ரிஜிசுடன் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார். மதியம் 2 மணி அளவில் மோட்டார்சைக்கிள் குமாரபாளையத்தை கடந்து பைபாஸ் சாலையில் உள்ள பவானி லட்சுமிநகர் அருகே சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் பைபாஸ் சாலையில் இருந்து பவானிக்கு செல்வதற்காக சோமசுந்தரம் மோட்டார்சைக்கிளை வலதுபுறமாக திருப்ப முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மோட்டார்சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது. இதில் சோமசுந்தரமும், சுபஸ்ரீயும் லாரியின் பின்னால் விழுந்தனர். இதில் இருவரும் லேசான காயம் அடைந்தனர். ஜெயலட்சுமியும், ரிஜிசும் லாரியின் முன்சக்கரத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் அவர்கள் பரிதாபமாக இறந்தார்கள். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயலட்சுமி, ரிஜிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். காயம் அடைந்த சோமசுந்தரமும், சுபஸ்ரீயும் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார். இறந்த 2 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.