சுற்றுலா பயணிகளை கவரும் ‘விஸ்டா டோம்’ ரெயில் பெட்டி


சுற்றுலா பயணிகளை கவரும் ‘விஸ்டா டோம்’ ரெயில் பெட்டி
x
தினத்தந்தி 5 Sept 2017 5:01 AM IST (Updated: 5 Sept 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘விஸ்டா டோம்’ ரெயில் பெட்டி விரைவில் மத்திய ரெயில்வேயில் இயக்கப்பட உள்ளது.

மும்பை,

இந்திய ரெயில்வே பயணிகளை கவர பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் வை–பை, எல்.இ.டி. திரைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய குளுகுளு தேஜஸ் ரெயில்கள் மத்திய ரெயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரெயில் மும்பை– கோவா இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மத்திய ரெயில்வே புதிய ‘விஸ்டா டோம்’ ரக ரெயில் பெட்டியை வாங்கி உள்ளது. சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட இந்த பெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை வந்தடைந்தது. இந்த பெட்டி தற்போது வாடிபந்தர் பகுதியில் ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் ரெயிலில் சென்றவாறு இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இந்த ரெயில்பெட்டி அகல கண்ணாடி ஜன்னல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயிலின் கூரை பகுதியிலும் அகல கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல பயணிகள் தங்கள் இருக்கையை எந்த திசையிலும் சுழற்றி கொள்ள முடியும்.

பெட்டியில் மொத்தம் 40 புஷ்பேக் சீட்டுகள் உள்ளன. பாடல் மற்றும் சினிமா பார்க்கும் வகையில் 12 எல்.சி.டி. திரைகள் இடம்பெற்றுள்ளன. சிறப்பு அம்சமாக பெட்டியின் பேண்டரி காரில் குளிர்சாதன பெட்டி, ஜூஸ் மேக்கர், மைக்ரோ ஓவன் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் உடாசி கூறும்போது:– இந்திய ரெயில்வேயில் இது 2–வது ‘விஸ்டா டோம்’ ரக ரெயில் பெட்டி ஆகும். முதல் பெட்டி விசாகப்பட்டினம்– அரகு மலை பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய ரெயில்வேயில் இந்த பெட்டியை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதேபோல இந்த பெட்டியில் பயணம் செய்வதற்கான கட்டணமும் தீர்மானிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story