குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை சாலைகள்– வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
குமரி மாவட்ட பகுதிகளில் நேற்று மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள், வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் விவசாயத்தொழில் முக்கியத்தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்–1, சிற்றார்–2, மாம்பழத்துறையாறு, பொய்கை போன்ற அணைகள் பூர்த்தி செய்து வருகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணைகள் விளங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதின் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அணைகள் அனைத்தும் வறண்ட நிலையில்தான் காட்சி அளித்தன. இந்த ஆண்டாவது பருவமழை கண்ணாமூச்சி காட்டாது என்ற எதிர்பார்ப்பில் இருந்த குமரி மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில்தான் தென்மேற்குப் பருவமழையின் தொடக்கம் அமைந்திருந்தது. அதன்பிறகு தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடுமையான மழை பெய்தபோதிலும்கூட குமரி மாவட்டத்தில் சாரல் மழையாகவும், மிதமான மழையாகவுமே பெய்து வந்தது.
அவ்வப்போது பெய்த மழையினால் அணைகளில் பெருகிய தண்ணீரை நம்பி குமரி மாவட்ட விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடியான கன்னிப்பூ சாகுபடியை மேற்கொண்டனர். ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் தண்ணீர் குறைவாக இருந்ததின் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக திறக்கப்பட்டது. மழை குறைவாக பெய்ததால் தாங்கள் சாகுபடி செய்த நெற்பயிரை காப்பாற்ற முடியுமா? என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு இருந்து வந்தது. மேலும் குமரி மாவட்டத்தில் பல ஆண்டுகள் இல்லாத வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. இதனால் பாசனத்தேவைக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணைகளின் தண்ணீரை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை குமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டது.
இதனால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யாதா? அணைகள், குளங்கள் நிரம்பாதா? ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாதா? நிலத்தடி நீர்மட்டம் உயராதா? என்ற ஏக்க பெருமூச்சோடு வானத்தை பார்க்கும் நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கடுமையாக சுட்டெரித்தது.
மாலை 4.30 மணி அளவில் நாகர்கோவில் நகரப்பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்யத் தொடங்கியது. இந்தமழை தொடர்ந்து இரவு 7 மணி வரை கொட்டித்தீர்த்து.
சுமார் 2½ மணி நேரமாக பெய்த இந்த மழையினால் நாகர்கோவில் நகரின் கேப் ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, பறக்கை ரோடு, மீனாட்சிபுரம் ரோடு, செம்மாங்குடி ரோடு, கே.பி.ரோடு, கோர்ட்டு ரோடு, பாலமோர் ரோடு, அசம்பு ரோடு, ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.
ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அனந்தனாறு வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் வாய்க்கால் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு கரைபுரண்டு ஓடியது. நாகர்கோவில் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தன.
இதேபோல் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கன்னியாகுமரி, மார்த்தாண்டம், கருங்கல், குளச்சல், அருமனை, புதுக்கடை, பூதப்பாண்டி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. சில பகுதிகளில் இடி– மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் பாய்ந்தோடியது. அந்தந்த பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், கிளை ஆறுகள் போன்றவற்றிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
கன்னியாகுமரி பகுதியில் பெய்த பலத்த மழையினால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்களில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
பேச்சிப்பாறை– 50, பெருஞ்சாணி– 5.4, சிற்றார் 1– 17, சிற்றார் 2– 4.8, ஆனைக்கிடங்கு– 5, அடையாமடை– 2, புத்தன் அணை– 5, திற்பரப்பு– 4.2, சுருளோடு– 10, பாலமோர்– 57.8, மயிலாடி– 8.4, கொட்டாரம்– 5.2, முக்கடல்–2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 460 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 201 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 11.10 அடியாக இருந்தது.
பெருஞ்சாணி அணைக்கு 419 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 396 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 38.20 அடியாக இருந்தது. முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 14.80 அடியாக உள்ளது.
குமரி மாவட்டப்பகுதிகளில் நேற்று திடீரென கொட்டித்தீர்த்த மழை எதிர்பார்ப்புடன் இருந்த மக்களை மகிழ்ச்சியில் திழைக்கச் செய்தது.