மார்த்தாண்டம் பகுதியில் பலத்த மழை: அருமனை அருகே மின்னல் தாக்கி பெண் பலி
மார்த்தாண்டம் பகுதியில் நேற்று இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அருமனை அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
அருமனை,
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் வெயில் அடித்தது. நேற்று மதியம் மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், திருவட்டார் போன்ற பகுதிகளில் வானில் கார்மேகம் சூழ்ந்தது. தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
அருமனை பகுதியில் பெய்த மழையில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–
அருமனை அருகே மஞ்சாலுமூடு, பிரைக்கரையை சேர்ந்தவர் வினு, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரம்யா(27). இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு.
வினு நேற்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வீட்டில் ரம்யாவும் குழந்தையும் மட்டும் இருந்தனர்.
இந்தநிலையில், நேற்று மதியம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, ரம்யா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். குழந்தை வீட்டின் உள்ளே இருந்தது. திடீரென ரம்யா மீது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாய் இறந்ததை கண்டதும் குழந்தை கதறி அழுதது.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் ரம்யா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருமனை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.