நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூரில், ரெயில் மறியலுக்கு முயன்ற 26 பேர் கைது

திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர் இந்தியா அமைப்பு சார்பில் திருப்பூர் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இதன்படி அந்த அமைப்பினர் நேற்று காலை காதர்பேட்டை அருகில் இருந்து தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டு, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். ரெயில் நிலைய வாசலில் வந்த அவர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நவுபல் ரிஷ்வான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மதன், துணை செயலாளர்கள் அஸ்கர், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் திடீரென அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வலுகட்டாயமாக வெளியேற்றினார்கள். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி அங்கு நின்ற அவர்கள், தாங்கள் வைத்திருந்த மோடியின் புகைப்படத்தை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரையும் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். பின்ன அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்த போலீசார் மாலையில் விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.