ஆற்று வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி சாவு


ஆற்று வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 5 Sep 2017 10:45 PM GMT (Updated: 5 Sep 2017 7:38 PM GMT)

ஆற்று வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டம் சிங்காரா வனச்சரகம். இங்குள்ள மசினகுடி கல்லல்லா வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு பெண் யானை சோர்வுடன் சுற்றித்திரிந்தது. இதை அறிந்த வனத்துறையினர், முதுமலை வன கால்நடை டாக்டர் விஜயராகவன், அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் அந்த யானை அங்கேயே சுற்றி வந்தது.

இந்த நிலையில் கடந்த 3–ந் தேதி அந்த யானை தண்ணீர் குடிப்பதற்காக கல்லல்லா ஆற்றில் இறங்கிய போது வெள்ளத்து நீரில் விழுந்தது. பின்னர் ஆற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த யானையை, சேரன், வசிம், சங்கர் உள்ளிட்ட 5 கும்கி யானைகள் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அதன்பிறகு அந்த யானை மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் கோவை மண்டல வன கால்நடை டாக்டர் மனோகரன் சிகிச்சை அளித்தார். மேலும் கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டு யானையின் கண்கள், அடிவயிறு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டு இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் அந்த யானையால் புல் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட முடிய வில்லை. இதன் காரணமாக யானையின் உடல்நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானைக்கு சுமார் 60 வயது இருக்கும். வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக காட்டு யானை இறந்து விட்டது. அதன் உடல் இன்று (புதன்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது என்றனர்.


Next Story