மாணவி அனிதா தற்கொலை: தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்


மாணவி அனிதா தற்கொலை: தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

நீட்தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சையிலும் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று முன்தினம் தஞ்சை சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாகவும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, மாநில செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் மறியலில் ஈடுபடக்கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

வகுப்புகள் புறக்கணிப்பு

தஞ்சை கரந்தை உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதே போல் பூண்டி புஷ்பம் கல்லூரி, வாண்டையார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று தங்கள் கல்லூரிகளில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதா சாவு குறித்து நீதிவிசாரணை நடத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ரெயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story