வேலூர், காட்பாடியில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்


வேலூர், காட்பாடியில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக வேலூர், காட்பாடியில் நேற்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்பாடி,

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன், ஊரீசு கல்லூரியில் படித்தவர் என்பதால், அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஆசிரியர்தின விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஆசிரியர் தின விழாவை புறக்கணித்தனர். கல்லூரி வெளி கதவையும் பூட்டினர். தகவலறிந்ததும், போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி காட்பாடியில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்களும், நேற்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரியில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள் சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவி அனிதா உருவப்படத்திற்கு மெழுகு வர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.


Related Tags :
Next Story