நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் 2–வது நாளாக மாணவர்கள் போராட்டம் திடீர் மறியல்


நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் 2–வது நாளாக மாணவர்கள் போராட்டம் திடீர் மறியல்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:30 AM IST (Updated: 6 Sept 2017 3:58 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் மாணவர்கள் 2–வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜீவ்காந்தி சிலை அருகே திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி வழங்கக்கோரியும் தமிழகம்–புதுச்சேரியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். புதுவையில் நேற்று முன்தினம் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் இரவில் கடலூர் ரோட்டில் உள்ள ரோடியர் மில் திடலில் திடீரென்று 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு போராட முயன்றனர். சமூக வலைதளங்கள் மூலம் மற்ற மாணவர்களையும் போராட அழைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரோடியர் மில் திடலில் போராட்டம் நடத்த வேண்டுமானால் கல்விதுறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று போலீசார் மாணவர்களை எச்சரித்தனர்.

ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50–க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இரவோடு இரவாக விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் புதுவை சட்டக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஜீவானந்தம் பள்ளி, வ.உ.சி. பள்ளி உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 2–வது நாளாக வகுப்புகளை புறக்கணித்தனர். அந்தந்த கல்லூரிகளில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகே வந்து கூடினர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் படம் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி அணி அணியாக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். பின்னர்

அங்கு தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி வழங்கக்கோரியும் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மாணவர்கள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அவர்களிடையே விளக்க உரையாற்றினார்கள்.

இதற்கிடையே வகுப்புகளை புறக்கணித்த மாணவ, மாணவிகளில் ஒரு பிரிவினர் ராஜீவ்காந்தி சிலை அருகே திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தினால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். மாணவ, மாணவிகளின் போராட்டம் காரணமாக புதுவையில் நேற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் முன்பும், முக்கிய வீதிகளிலும் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் ரோடியர் மில் திடலில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தியதுபோல் நேற்றும் அங்கு மாணவர்கள் கூடிவிடாதவாறு அந்த வழியாக வந்த மாணவர்களை போலீசார் பக்குவமாக பேசி அனுப்பி வைத்தனர்.

இருந்தபோதிலும் காலையில் இருந்த அந்த பகுதியில் ஏராளமான மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து பார்த்து விட்டுச் சென்றபடி இருந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் ஆங்காங்கே நின்று விட்டு போராட்டம் நடந்த சுதேசி மில் பகுதிக்கு அவர்கள் சென்றனர். மதியம் 2 மணியளவில் அங்கிருந்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.



Next Story